பிராமணர் கள் சாப்பிடும் இடம்!!

toddy_parlour

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1252; தேதி:--- 26-8-2014

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி வேலை பார்த்த மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தவன் நான். எனக்கு வி.ஜி. சீனிவாசன் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அல்லும் பகலும் அனவரதமும் பாரதியின் புகழ் பாடுவார். சொல்லும் செயலும் சிந்தனையும் பாரதி பற்றியே இருக்கும். மதுரை சேதுபதி பள்ளியில் பாரதி சிலை வைக்க மூல காரணமும் முதற்காரணமும் அவரே. கி.வா.ஜகந்நாதன், நா.பார்த்த சாரதி போன்ற தமிழ் சான்றோர்களை வடக்கு மாசிவீதியில் நாங்கள் வசித்த வாடகை வீட்டிற்கு அழைத்து வந்து எனது தந்தை தினமணி பொறுப்பாசிரியர் வேங்கடராமன் சந்தானத்துடன் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பார். எனது அம்மா ராஜலெட்சுமி சந்தானத்தின் காப்பி, உலகப் பிரசித்தம்! அதைச் சாப்பிடவே ஒரு கூட்டம் வரும்!


வி.ஜி.சீனிவாசன் நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர். நகைச் சுவை ததும்பப் பேசுபவர். ஒரு முறை அவருடன் கூத்தனூர் ஸ்ரீ சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகளை அழைத்துக் கொண்டு ஒரு தலத்துக்குச் சென்று வந்தோம். ஜீப் காரின் பின்புறத்தில் அமர்ந்தவுடன் ரிக் வேதத்தில் கரை கண்டு காஞ்சி மஹா சுவாமிகளிடம் சால்வை, தங்கக் காசு, வீடு, பசுமாடு ஆகியவற்றைப் பரிசாகப் பெற்ற உத்தமோத்தமர் ஸ்ரீ சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகளை அறிமுகப் படுத்தி வைத்தேன்:--
seschool

இவர் பெரிய வேத வித்து! வேத விற்பன்னர்!!  --- என்று!!!

அவர் இதைக் கேட்டவுடன் வெடிச் சிரிப்பு சிரித்தார். முதலில் எனக்கும் சகோதரர்களுக்கும் ஏன் சிரிக்கிறார் என்று புரியவில்லை. வேத வித்து! வேத விற்பன்னர்! என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தவுடன் காரணம் புரிந்தது! நாங்களும் சிரித்தோம். பசுவும் பசுமாடு போன்ற குணம் உடைய பிராமணர்களும் என்று புறநானூறு பிராமணர்களைப் போற்றுகிறது. அப்படிப்பட்ட பசு உள்ளம் கொண்ட சாஸ்திரிகளுக்கு ‘ஜோக்’ புரியவில்லை. அதை விளக்கும் நிலையில் நாங்களும் இல்லை!!


வேதத்தை வித்துப் பிழைப்பவர் = வேத வித்து
வேத விற்பன்னர் = வேதத்தை விற்பனை செய்பவர் என்று வி.ஜி சீனிவாசன் பொருள் கொண்டதே சிரிப்பொலிக்குக் காரணம்.

நான் கண்ட மிகப் பெரிய வேத விற்பன்னர் ஸ்ரீ சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகள் என்றபோதும் அந்த சூழ்நிலையில் வி.ஜி.எஸ். அடித்த ‘ஜோக்’ பொருத்தமானதே. ஏனெனில் சாஸ்திரிகளை நாங்கள் காரில் அழைத்துச் சென்ற காரணமே ஒரு ஊரில் உபந்யாசம் செய்யத்தான்—அதாவது வேத அடிப்படையில் உபந்யாசம் செய்து தட்சிணை பெறத்தான்!
iyer mess sign-board


பிராமணர் ---கள்--- சாப்பிடும் இடம்!!

ஒரு நாள் முதல் அறையில் உட்கார்ந்து கொண்டு வி.ஜி.எஸ். அவர்கள் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எந்த ஓட்டலில், ‘கிளப்’பில், காப்பி நன்றாக இருக்கும் என்று பேச்சு திசை திரும்பியது. அப்போது ஒரு பொருத்தமான ஜோக் அடித்தார்:

“ இந்த ஓட்டல்காரர்கள் எல்லோரும் பிராமண விரோதிகளா?

பிராமணாள் ஓட்டல் ( பிராமணர்களை விரட்டு= ஓட்டு)
ஐயர் கிளப் ( ஐயரை கிளப்பு )
பிராமணர் கள் சாப்பிடும் இடம்
என்றெல்லாம் எழுதிப் போடுகிறார்களே!”
( பிராமணர்கள் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் பிராமணர் ‘கள்’ குடிக்கும் என்று அர்த்தம்—அனர்த்தம் ஆகிவிடும்! )


அறை முழுதும் வெடிச் சிரிப்பு. சிரிப்பொலி அடங்க கொஞ்ச நேரம் ஆயிற்று. வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டு முதல் அறைக்கு பகுத்தறிவுப் பாசறை என்று பெயர். எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

 bangalore102brahmins
ஐந்து வீட்டுக்கு அப்பால் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஆர்.கே.யும் (டாக்டர் எஸ்.ராம்கிருஷ்ணன்) அவ்வப்போது வாக்குவாதத்தில் இறங்கி எங்களுடன் மோதுவார். அவர் “கம்பனும் மில்டனும்” என்ற ஆய்வுக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்கியபோது அவருக்கு பாராட்டு விழா நடத்துவதிலும் எனது தந்தை மூலம் தினமணியில் செய்தி வெளியிடுவதிலும் நான் முக்கியப் பொறுப்பு வகித்தேன். காரணம் அவரிடம் ஆங்கிலம் பயின்றது. அவர் எழுதிய அருமையான ஆராய்ச்சி நூல்களை இன்றும் லண்டனில் திரும்பப் படிக்கிறேன்!


எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. வடக்கு மாசிவீதியில் ஒரு ஐயர் கிளப்பில் இங்கே ஜலத்தை அண்ணாந்து (உயர்த்தி) குடிக்கவேண்டும் என்று எழுதிப் போட்டிருப்பார்கள். பிராமணர்கள் அல்லது அவர்களைப் போன்ற பழக்கம் உடையவர்கள் மட்டூமே அனுமதிக்கப்படுவர் என்பதை இப்படி எழுதுவதன் மூலம் சொல்லாமல் சொல்லுவர். ஏனெனில் பிராமணர்கள் தண்ணீரை எச்சில்படுத்தி சாப்பிட மாட்டார்கள். இங்கு லண்டன் வந்தவுடன் நாங்கள் எல்லோரும் அப்பிராமணர்கள் ஆகிவிட்டோம்!!

kandy brahmins hotel

Post a Comment

0 Comments