யாழே வீணை


யாழா? வீணையா
வரகுணப் பாண்டியர்வழி நோக்கு

கட்டுரையாளர்

அமுதா பாண்டியன்

இணைப்பேராசிரியர், ஆங்கிலத்துறை
மாநிலக்கல்லூரி, சென்னை.


வரகுணப் பாண்டியர் தமிழிசை இயக்கத் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் மூன்றாம் மகன். தாளம் தப்பாது பாடுவார், வீணை வித்தகர். அகில இந்திய வானொலியை முதலில் ஆரம்பித்த போது அதில் பாடும் பாடகர்கள் இவருடைய இசைவுக்குப் பின்னர்தான் பாட அனுமதிக்கப்படுவர். பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல்என்னும் இவருடைய ஆராய்ச்சி நூல் 195 0 ஆம் ஆண்டு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்டனர். இவருடைய ஆராய்ச்சி, ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தில் உள்ள, ‘செங்கோட்டி யாழ் என்பது செவந்த மரத்தாற் செய்யப்பட்டு ஏழு தந்திகளுடன் அதாவது இசை நரம்புகள் நாலும் பக்க நரம்புகள் மூன்றுமுடையதா தற்காலத்தில் நாம் வழங்கிவரும் வீணை என்பதாகத் தெரிகிறது’ (ஆபிரகாம் பண்டிதர், கருணாமிர்த சாகரம் ப.580) என்னும் கூற்றிலிருந்து துவங்குகிறது.
பாணர் கைவழிஎன்னும் வரகுணப்பாண்டியர் நூல், இக்கூற்றை செய்வழி ஆராய்ச்சி மூலமும் பழந்தமிழ் நூல்களின் மேற்கோள் மூலமும் தெள்ளத்தெளிவாக ஆராய்ந்து உண்மையென நிரூபிக்கின்றது.
பாணர் என்ற சொல்லிலிருந்து வந்த இசைப்பாட்டை குறிக்கும் பாண்என்னும் சொல், ‘பா’, ‘பண்’, ‘பாணிஎன்ற மூன்று அங்கங்களை உள்ளடக்கியது. பா என்பது சாகித்தியம், பண் என்பது இராகம், பாணி என்பது தாளம். இம்மூன்றையும் சேர்த்து உவகை அளிக்கும் இசையை  இசைத்த பாணர் கையில் வைத்திருந்த இசைக்கருவி யாழ். ஆனால் தற்காலத்தில் யாழ் மறைந்துவிட்டது என்பதும், வீணை என்பது வடநாட்டு இசைக்கருவி என்பதும் பொதுவாக நிவி வரும் வாதங்கள். ஆனால் வீணை என்பது தமிழ்ச் சொல் தான், யாழின் மறு உருவமே வீணை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது, பாணர் கைவழி என்ற யாழ்நூல்.
இவர் தன் கூற்றை மெளிணிப்பிக்கும் வகையில் தமிழ் இலக்கியக் காலத்தை மூன்றாகப் பிரிக்கின்றார். கி.பி. 7ஆம் நூற்றாண்டு செங்கோட்டி யாழ் என்பது செவந்த மரத்தாற் செய்யப்பட்டு ஏழு தந்திகளுடன் அதாவது இசை நரம்புகள் நாலும் பக்க நரம்புகள் மூன்றுமுடையதாய் தற்காலத்தில் நாம் வழங்கிவரும் வீணை என்பதாகத் தெரிகிறது
வரையான திருவள்ளுவர், இளங்கோவடிகள் காலத்தை முதற் காலமாகவும், கி.பி. 7 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையான அடியார்க்கு நல்லார், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருத்தக்கதேவர் ஆகியோரின் காலத்தை இடைக்காலமாகவும் பிற்காலத்தை மூன்றாவது காலமாகவும் பிரிக்கிறார்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சங்க காலத்தில் வீணை என்ற சொல்லே இல்லை. கி.பி. முதலாம் நூற்றாண்டில் திருவள்ளுவர் தம் திருக்குறளில் குழலினிது யாழினிது’’ என குழலையும், யாழையும் கூறுகின்றார். இவர் நூலில் எங்குமே வீணை என்ற சொல் காணப்படவில்லை. ஆகவே வீணை என்ற ஒரு சொல்லாவது அல்லது கருவியாவது இவர் காலத்திலில்லை என்பது தெள்ளத்தெளிவு.
இக்காலப் பகுப்பிலேயே இரண்டாம் நூற்றாண்டிலுள்ள இளங்கோவடிகள், இந்திரலோகத்தில் நடந்ததெனக் கருதப்படும் ஒரு புராண நிகழ்ச்சியினை கூறும்போது மட்டுமே நாரதன் வீணை’ (சிலப்பதிகாரம், கடலாடு காதை, 18) என்றும், ‘மங்கலமிழப்ப வீணை’ (சிலப்பதிகாரம், கடலாடு காதை, 22) என்றும் குறிப்பிடுகிறார்.
இளங்கோவடிகள் யாழ் என்றே தன் நூல் முழுவதும் கூறி, செங்கோட்டி யாழைப்பற்றி உறுப்புறுப்பாய் மிக நுட்பமாக எழுதியிருப்பினும், வீணையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. கவிஞன், தண்μமையோன், குழலாசிரியர், யாழாசிரியர், இசையாசிரியர் என ஒவ்வொருவராய் குறிப்பிட்டு அவரவர் இலக்கணத்தினைக் கூறியிருப்பவர், ‘வீணையாசிரியர்என்று எவரையும் குறிப்பிடவில்லை.
குழலினர், யாழினர் இருக்கையைக் கூறியிருப்பவர், வீணையர் இருக்கையைக் குறிப்பிடவில்லை. வீணை என்ற சொல் அக்கால கட்டத்தில் தான் நுழைந்தது. அக்காலத்தில் வீணை என்ற சொல் ஒரு இசைக் கருவியைக் குறிக்கவில்லை.
வடநூலோர் மனிதனை, ‘பிர்ம வீணைஎன்றும் தைவவீணைஎன்றும் கூறுகின்றனர். நாரதன் வீணைஎன்பதற்கு அரும்`பத உரையாசிரியர், ‘நாரத முனி வீணைஎன்று கூற, அடியார்க்கு நல்லார், ‘யாழாசிரியனாகிய நாரத முனிவன் யாழின் ஏழிசையின்பமும்  தெரியப்பாடும் பாடலைஎன்று கூறுகின்றார். இதனால் வீணையை நாரத முனிவன் கையிலிருக்கும் ஒரு கருவியாகவே புராணக்கதைகள் வாயிலாகக் கொண்டனர் எனவும் அவ்வாறான ஒரு கருவி தென்னகத்தில் புழக்கத்திலில்லை எனவும் அதை விளக்கும்போது அடியார்க்கு நல்லார் யாழ் என்றே கொள்கிறார் என்றும் அறியலாம். மங்கலமிழப்ப வீணைஎன்பதற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், (இடைக்காலத்தைச் சேர்ந்தவர்) தன் உரையில், இவ்வீணை உருப்பசி கையில் வீணை என்பாருமுளர். அது பொருந்தாது. . . இனி வீணையைச் சாரீர வீணையாக்கி, மங்கலமிழப்ப என்பதற்கு இவள் கடவுள் யாக்கையொழிந்துமக்கள் யாக்கையில் தங்குகவெனச் சபித்தான் (சிலப்பதிகாரம், கடலாடுகாதை, அடி 22 உரை)என்று கூறுகின்றார். இவர் வாழ்ந்த இடைக்காலத்தில் அதாவது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் வீணை எனப்பட்ட சொல் அதிகமாகப் பயன்பாட்டில் இருந்தபோதிலும் இச்சொல்லை அவர் கருவி என்னும் சொல்லுக்கு மறு சொல்லாகக் கூறாமல், உடல் என்னும் கருத்திலேயே கையாண்டுள்ளார். எனவே சிலப்பதிகாரத்திலும் அதற்குப் பின்னும் வீணை என்னும் சொல் மிடற்றையே (யாக்கையில் பாடும் இடம், கழுத்து) குறித்து, பின், மிடற்றிசையையே குறித்து வந்தது.
இச்சொல்லை இளங்கோ இசைக்கருவி என்னும் பொருளில் கூறாது, மிடறு (தொண்டை) என்றே கொண்டார். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலம் என்று கூறின், இக்காலத்தில் முதலில் தோன்றியவர் திருத்தக்கதேவர் ஆவார். இவர் சீவக சிந்தாமணியில் விருந்தாக யாழ்பண்ணி வீணை தான் தோற்பான்’’ (சிந்தாமணி, செய். 730) என்று கூறியுள்ளார். வீணைப்போருக்குச் செல்குவம் யாழுமின்னேஎன்று சொல்லிச் சென்ற சீவகன் அவ்வீணைப் போரில் பயன்படுத்திய இசைக் கருவி யாழே என்பது, எழிற்றகை மார்பற்கின் யாழிது வுய்த்துக் கொடுமோ வென்றாள் (செய். 715)
................தீந்தேன் அணிபெறவொழுகி யன்ன வமிழ் துறழ் நரம்பின் நல்யாழ்
கணிபுகழ் காளைகொண்டு கடலகம் வளைக்க லுற்றான் (செய். 722)
கண்டறிகிலா விடைக் காம வல்லியாழ் கொண்டவர் குழாத்திடைக் கொடியி னொள்கினாள் (செய். 654)
அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி (செய். 727) என்ற செய்யுள்களிலிருந்து அறிய முடிகின்றது.
ஊதும் கருவிகளைப் பயன்படுத்தும் போது பாடுவதற்கு முடியாது. மேலும் கொட்டும் கருவிகளுக்கு மிக அதிகமான கவனம் தேவையாதலால், கொட்டும் கருவிகளுடன் யாரும் பாடுவதில்லை அதனால் யாழ்க்கருவியே மிடற்றிசைக்கு ஏற்றது. விருந்தாக யாழ் பண்ணி வீணைதான் நேற்பான்என்று கூறுவது, முதலில் இனிமைபெற யாழை இசைப்பித்துப் பின்பு தன்மிடற்றாலும் யாழாலும் பாடினான்’’ என்று பொருள்படுகிறது. இதை நச்சினார்க்கினியார் உரைமேலும் பலப்படுத்துகிறது.
வீணை என்றது யாழையும் பாட்டையும் (சிந்தாமணி: 730 உரை) வீணை தாளத்தோடே கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு (சிந்தாமணி: 411 உரை) சீவகன் தத்தையை யாழும் பாட்டும் வென்றான் (சிந்தாமணி: 741 உரை) நச்சினார்க்கினியர் தம் காலத்தில் வீணை என்றொரு கருவி இருந்திருக்குமாயின் அதைக் குறிப்பிட்டிருப்பார். இவற்றினால் இக்காலத்தில் வீணை என்னும் சொல் யாழும் மிடறும் உடன் நிகழ்த்திய நிகழ்ச்சியே ஆகும்.
திருஞானசம்பந்தர் பல இடங்களின் வீணை என்ற சொல்லைக் கையாண்டுள்ளார். ஆனால், பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணரா குழலினோசை வீணை மொந்தை கொட்ட முழவதிர என்னும் இடங்களில் வீணை என்னும் சொல்லை, யாழிசையும் மிடற்றிசையும் சேர்ந்து நிகழ்ந்த செயலைக் குறிக்கவே பயன் படுத்தியுள்ளார். அங்ஙனமே மாணிக்கவாசகரின், இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்னும் கூற்றிலும் இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
கடைக்காலம் என்னும் தளத்தின் மூன்றாம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலத்து தமிழ்ச் சொற்களை வடமொழி சொற்களாக ஆக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தமிழ்ப்பெயர்
சமஸ்கிருதப் பெயர்
மாதொருபாகன்
அர்த்தநாரீஸ்வரர்
முருகன்
சுப்பிரமணியன்
அங்கயற்கண்ணி
மீனாட்சி
செந்தாமரைக்கண்ணி
செங்கமலாட்சி
இன்பவல்லி
அந்ந்தவல்லி
ஐயாறப்பர்
பஞ்சநதீசர்
வீணை என்னும் சொல்லை, யாழிசையும் மிடற்றிசையும் சேர்ந்து நிகழ்ந்த செயலைக் குறிக்கவே பயன் படுத்தியுள்ளார்
இவ்வாறு பல பெயர்கள் வடமொழியாக்கம் பெற்றது போல், யாழ் என்னும் சொல்லிற்கு வீணை என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். யாழழகர்என்ற பெயர் வீணா சுந்தரேஸ்வரர்என்று மாற்றப்பட்டது. இதற்கு மேலும் பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.
ஞானப்பிரகாச சுவாமிகள்: இவர் வீணாகானபுரத்தில் (யாழ்ப் பாணத்தில்) (அபிதான சிந்தாமணி பக்கம் 480-: வரி 41, 42.) என்றவிடத்து யாழ் என்ற சொல்லிற்கு வீணை என்னும் சொல்லை அமைத்திருத்தல் காணல்வேண்டும்
இவ்வாறு யாழ் என்ற பெயர் எவ்வாறு வீணையாயிற்று என்று விவரிக்கும் வரகுண பாண்டியன், பின்னர் யாழின் உறுப்புகளாக விவரிக்கப்படும் பல்வேறு பாகங்களையும் பழந்தமிழ் நூற்களின் வாயிலாக விவரித்து எடுத்துக்காட்டுகளுடன் கூறி, பண்டைய யாழே தற்கால வீணை என்று தெள்ளத்தெளிவாகக் கூறுகிறார்.

யாழுறுப்புகள்
பத்துப்பாட்டில் யாழுறுப்புகளாக பத்தல், போர்வை, திவவு, ஆணி, வறுவாய், மருப்பு, அல்லது கோடு, கவைக்கடை, யாப்பு, உந்தி, கோல் அல்லது புரி நரம்பு, வணர் ஆகிய உறுப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் பத்தல், கோடு, ஆணி, நரம்பு, ஒற்றுறுப்பு, திவவு, தந்தரிகம், கோல், மாடகம் ஆகிய உறுப்புகளையும் கூறுகின்றது.
இவற்றுடன் சிலப்பதிகாரத்தின் இரண்டு உரையாசிரியர்களும் உணர், உந்தி, தகைப்பு, மாடகம், ஐம்பத்தொரு உறுப்புகள் முதலியவற்றைக் கூறுகின்றனர். சீவக சிந்தாமணி போர்வை, திண்கோல், நரம்பு, திவ்வு, மாடகம், ஆணி, பத்தர், மருப்பு அல்லது கோடு முதலிய உறுப்புகளையும் சிறப்பாகக் கூறுகின்றது.
இங்கு சங்க நூல்களில் கூறப்பட்ட யாழுறுப்புகளின் செய்திகளை மட்டுமே கூறி, அவற்றாலேயே யாழ் என்னும் உறுப்பு எவ்வளவு நுட்பமாகச் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இவ்வுறுப்புகளால் செய்யப்பட்ட யாழ், நிச்சயமாக ஹார்ப்என்ற கருவியை ஒத்திராமல், எவ்வாறு தற்கால வீணையை ஒத்தது என்பது தெளிவா விளக்கமுறும்.
1 பத்தல்
குளப்பு வழியனை கவடுபடு பத்தல் (பொருந: 4)
வயிறு சேர்ப் பொழுகிய வகையகை அகளத்து (சிறுபாணா: 22)
இவ்விரண்டு அடிகளையும் பார்க்கும்போது, குடம் என்று தற்காலத்தில் அழைக்கப்பெறும் பத்தர், மானின் குளம்பு போன்ற யாழ்
உருவில் முன்பாகம் குறுகி பின்பாகம் விரிகிறது. நடு வயிறு தாழி போல் புடைத்து இருக்கும் எனத் தெரிகிறது. பொருநராற்றுப்படை இது குமிழ், முருக்கு, தணக்கு ஆகிய மரங்களால் செய்யப்பட்டது என்று கூறுகிறது. முருக்கு மரம் தற்காலத்தில் பலாமரமென்றும், தணக்கு நுணா என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்திலும் தட்பவெப்ப நிலைக்கு சுதிச் சுருங்காமல் இருப்பதற்காக பலா மரத்திலும், வணர் நுணா மரத்திலும் செய்யப்படுகின்றன. முதலில் பத்தர் என்ற பெயராலே அழைக்கப்பட்டு வந்தது. சிலப்பதிகார உரையாசிரியர் காலத்தில் பத்தர், வணர் என்று இரண்டு பெயர்களால் அழைக்கப்பட்டு இருபாகங்களாகின்றது.
2 போர்வை
பத்தரின் வாயைத் தோல் கொண்டு போர்த்தியதற்கான சான்றுகள் உள்ளன.
கானகுமிழன் கனிநிறங் கடுப்பப்
புகழ்விணைப் பொலிந்த பச்சைபோடு (சிறுபாணா: 225-226)
எரிகின்ற நெருப்பின் நிறம்போல் வண்ணம் கொள்ளும்படி
பதனிடப்பட்டுஎன்பது மட்டுமின்றி, இவ்வண்ணத்தை மேலும் பொன்னிறமான தோலைப் பத்தலின் வாயினில் போர்த்தி, பிசின் தடவி ஒட்டி, வரகின் கதிர்கள் எவ்வாறு இரட்டை இரட்டையாக ஒழுங்காக இருக்குமோ அல்லது கட்டப்படும்
யாழ்

புறநானூற்றுச் செய்யுள் மின்னோர் பச்சை மிஞிற்றுக் குரற் சீறியாழ்’ (புறநானூறு, 308: 2) என்று கூறுகிறது. இதை எவ்வளவு திண்மையாகக் கலை வண்ணத்தோடு கட்டினர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை விளக்குகின்றது.
பாசிலை பொழித்த பராசரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத
னுள்ளகம் புரைய மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன விசியுறு போர்வை (4-9)
இங்கு, பாதிரிப்பூவின் வயிற்றிடத்தைச் சிவந்த மஞ்சள் என்று கூறுகிறார். கட்டப்படும்போது கமுகின் பாளையுள் உள்ள விரியாப் பூக்கருக்கள் மாதிரி உள்ளன என்கிறார். இதற்கு மேலும் சென்று, ‘பொன்னிறமான தோலைப் பத்தலின் வாயினில் போர்த்தி, பிசின் தடவி ஒட்டி, வரகின் கதிர்கள் எவ்வாறு இரட்டை இரட்டையாக ஒழுங்காக இருக்குமோ அல்லது கட்டப்படும்என்கிறார் புலவர் பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார்.
... ... ... வரகின்
குரல் வார்ந்தன்ன றுண்டுளை யீரீஇச்
சிலம்பமை பத்தல் பசையோடு சேர்த்தி
யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கையாப் பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போற் பச்சை (மலைபடுகடாம், 24-29)
யாழின் வாயை மூடும் தோலினால் செய்யப்பட்ட பத்தல்
பின்னாளில் மரத்தால் செய்யப்பட்டது.
3 கோல் அல்லது புரிநரம்பு
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர் புரிநரம்பு (மலை. 21-23)
திவவுகளால் கட்டப்படும் புரிநரம்புகள் தற்கால நடைமுறையில் யாழில் எவ்வாறு சுரஸ்தானங்கள் அமைக்கப் பெறுமோ அவ்வாறு குரலோர்த்துத் தொடுக்கும் முறையிலேயே பண்டை நாட்களிலும் கட்டப்பட்டன. திவவுகளால் கட்டப்பெறும் புரிநரம்புகள் திரண்டு திண்மையாக அமையப்பெற்றவை. அவை பண்மொழி நரம்புகளைவிட மிகப் பருமனாகவும் பொற்கம்பிகளைப் போல அல்லது தேன் ஒழுகும் போதுண்டாகும் தேன் ஊற்றின் தோற்றம் போல் செய்யப்பட்டவை என்பதை பெரும்பாணாற்றுப்படையில் காண்கிறோம். புரிநரம்புகளைப் பண்மொழி நரம்புகளினின்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக என்றே, ‘விரல் தெரிக்கும் நரம்புஎனக் கூறாது, ‘விரல் உளர் நரம்புஅதாவது விரலால்  அசைக்கப்பெறும் அல்லது தடவப்பெறும் நரம்பு எனக் கூறுகிறார்
அவையல் லென்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பிற்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல் (பொரு. 16-18)
புரிநரம்புகளைப் பண்மொழி நரம்புகளினின்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக என்றே, ‘விரல் தெரிக்கும் நரம்புஎனக் கூறாது, ‘விரல் உளர் நரம்புஅதாவது விரலால் அசைக்கப்பெறும் அல்லது தடவப்பெறும் நரம்பு எனக் கூறுகிறார்.
4 திவவு
திவவுகள், புரிநரம்புகளை யாழில் கோட்டுறுப்பால் அமைவுறக் கட்டும் வார்கட்டுகள். கருங்குரங்கு தன் கையில் ஒரு பாம்பின் கழுத்தைப் பிடித்த காலத்து, அப்பாம்பு அக்குரங்கின் கையை எவ்வாறு சுற்றித் திருகி இறுக்கிப் பிடிக்குமோ அவ்வாறான இறுக்கத்தோடும், பெண்ணின் கைவளையல்களின் உறழ்சியோடும் இருக்கும் என்பதைச் சிறுபாணாற்றுப்படையும், பெரும்பாணாற்றுப்படையும் முறையே கீழ்க்கண்டவாறு கூறுகின்றன.
பைங்கணூகம் பாம்பு பிடித்தன்ன
அங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்து வீங்கு திவவின் (சிறு. 221-222)
நெடும்பனைத் திரடோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்து வீங்கு திவவு (பெரும். 12-13)
திவவுகளால் கட்டப்பெறும் புரிநரம்புகள் சிறிதளவுகூட அபசுரங்களைப் பிறப்பிக்காத விதத்தில் குரல் (ச) என்ற முதல் தாளத்திலேயே கட்டப்பெறும் என்ற நுண்ணிய செய்தியை மலைபடுகடாம் கூறுகின்றது.
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பு (மலை. 21-23)
புரிநரம்புகளே இக்கால மெட்டுகள் ஆகும்.
5 ஆணி
யாழிலே இருவகையான ஆணிகள் உண்டு. பத்தலைச் சேர்த்து மூடப் பயன்படுத்தப்பட்டவை சாதாரண சுள்ளாணிகள். மற்றவை தந்திகளை முறுக்கிக் கட்டப் பயன்படுபவை. இவை நண்டின் கண்களை ஒத்தவை என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது.
அளைவாழ் அலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்த்த துரப்பமை ஆணி (பொரு. 9-10)
6 வறுவாய்
யாழிலிருந்து வெளிப்படும் ஒலி, நலம்பட வெளியாவதற்காகத் தோலினாலான பத்தரில் ஒரு சிறப்பு வாயினை அமைத்தனர். இதுவே அக்காலம் வறுவாய் எனப்பட்டது. இது எட்டாம் நாள் நிலவை ஒத்திருந்தது என்று கூறுகிறார் பொருநராற்றுப்படை ஆசிரியர்.
எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
யண்ணா வில்லா வமைவரு வறுவாய் (பொரு.11-12)
இதன் உள்ளே வெறும் வெற்றிடம்தான் என்பதைப் பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது.
சுனை வறந்தன்ன விடுடூங்கு வறுவாய் (பெரு. 10)
வறுவாய் அழகாக மணிபதித்துச் சித்திரிக்கப்பட்டிருந்தது என்பதைச் சிறுபாணாற்றுப் படை கூறுகிறது.
மணிநிரைத்தன்ன வனப்பன் வாயமைத்து (சிறு. 233)
யாழின் போர்வை தோலால் அமைந்திருந்த நாள் வரை வறுவாயும் இருந்திருக்க வேண்டும். பின்பு சைவ, சமண சமயத்தினரால் இதுமாற்றம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் சங்க நூல்களில் காணப்படும் இவ்வுறுப்பு அதன்பின் வந்த நூல்களில் இல்லை. பின்னர் வீணை வித்வான், சாம்பசிவ ஐயர் தான் வறுவாய் என்ற உறுப்பைத் தன் வீணையில் அமைக்கத் தொடங்கினார்.
7 கோடு
கோடு என்ற சொல் வரி, மரக்கொம்பு எனப்பொருள்படும். முற்காலத்தில் தண்டு, மருப்பு என்றும் கூறப்பட்டது. இது கொன்றை அல்லது கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டது.
கொன்றை கருங்காலி குமிழ் தனக்கே (பொரு. 22)
இதுகரிய நிறத்தோடு பளபளவென இருக்கும் என்றும் ஒருபுறம் வளைந்து ஏந்தி இருக்கும் என்றும் பின்வரும் பாக்கள் கூறுகின்றன.
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிள ருருவின்
வணர்ந்தேந்து மருப்பின் (மலை. 35-37)
பாம்பணந்தன்ன வோங்கிரு மருப்பின் (பொரு. 13)
அங்கோட்டுச் செறிந்த விழந்து வீங்குதிவவின் (சிறு. 222)
8 கவைகடை
யாழின் வளைவான கழுத்தினை அடுத்திருக்கும் யாளியின் முகம் போல் சித்தரிக்கப்பெற்ற உறுப்பே, யாழிற்கு தலையானதால், பத்தலே கடைப் பாகமாகும். இக்கடையான பாகத்தில் கவைத்து ஏந்தினாற் போல அமையப்பெறும் உறுப்பே கவைகடை எனப்படும்.
பிறை பிறந்தன்ன பின்னேந்து கவைக்கடை (பெரு. 11)
யாழுக்குரிய நரம்புகள் யாவும் முடிவில் கட்டப்பெறும் இந்த உறுப்பு தற்போது நாகபாசம் என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் கூட இது முதற்பிறை ஒத்த வடிவிலேயே உள்ளது. பெயர் மட்டும் மாற்றம் பெற்றுள்ளது
9 யாப்பு
சுள்ளாணிகளால் போர்வை கட்டப்பெறும் போது அவற்றை யானைக் கொம்பாற் செய்த யாப்பினால் பசை கொண்டு மூடுவர். இது ஒரு சிறிய உறுப்பாக இருப்பினும் இதுவும் இன்றளவும் வீணையின் உறுப்பேயாகும்.
இலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
புதுவது புனைந்த பொன்போற் பச்சை
புதுவது போர்த்த பொன் போற் பச்சை (மலை. 27-29)
டகாரி என்ற வடமொழிச் சொல்லால் அழைக்கப்பெறும் இவ்வுறுப்பு இப்போதும் திருவனந்தபுரம், மைசூர் ஆகிய இடங்களில் யானைத் தந்தத்தால் அமைக்கப்படுகிறது. தஞ்சாவூரில் தற்சமயம் மான்கொம்பால் செய்யப்படுகிறது.
10 உந்தி
உந்தி என்பது யாழின் வயிறு போன்ற பத்தலின் போர்வையின் நடுவில் வயிற்றின் நடுவில் தொப்புள் விளங்குவது போன்று மேடிட்டிருக்கும் என்பதை,
அகடு சேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது
கவடுபட கவையிய சென்றுவாங் குந்தி (மலை. 33-34)
என்று மலைபடுகடாம் கூறுகிறது. தற்காலத்தில் குதிரை என வழங்கப்பெறும் இந்த உறுப்பு, பண்டை உருவிலேயே இப்போதும் விளங்குகின்றது.
11 வணர்
வணர் என்ற சொல் வளைவு எனப் பொருள்படும் இதுவும் பத்தரைப் போலவே கூடாகக் குடைந்து செய்யப்படும். இதன் ஒருபுறம் கோடு இணைக்கப்பட்டிருக்கும். இணைக்கப்பட்டபின் இரண்டும் ஒரே உறுப்பு போன்றே காணப்படும். இவை இரண்டினையும், வணர்ந்தேந்து மருப்பின் (மலை. 37) அதாவது, வளைந்து ஏந்திய கோட்டினையும் என்று மலைபடுகடாம் கூறுகிறது-. சீறியாழை, ‘வணர் கோட்டுச் சீறியாழ்’ (புற. 155: 1) என்ற புறநானூற்றுச் செய்யுள் கூறுகிறது. இது தற்சமயம் வளைவு எனக் கூறப்பெறுகிறது.
தற்கால வீணையில் காணப்பெறும் பெரும்பாலான முக்கியமான உறுப்புகள் யாவும் சங்ககால நூற்களிலேயே காணப்பெறுகின்றன. இவ்வுறுப்புகளை உடைய ஒரு கருவி நிச்சயமாக வீணையையே ஒத்திருக்கின்றது. பலவிதமான யாழ்களில் செங்கோட்டி யாழ் என்பதே சிறிய யாழாக இருந்தது என்றும் அதுவே இன்று உருமாறாமல் வீணையாய் உள்ளது என்பதும் தெரிகிறது.
வடமொழி நூற்களின் விதிப்படி 32 விரலளவு அகலமும், 84 விரலளவு நீளமுமுடையதாய் குறுகலும் நீட்டமுமான ஆயிரம்நரம்புகள் கட்டப்பெற்று மூன்று மூலைகளிலும் இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்று நிலத்தின்மீது கிடத்தி, கையால் தடவி மீட்டப்படும் கருவி நாரதப் பேரியாழ். இது எவ்விதத்திலும் தாழிபோல் புடைத்துப் பருத்த கலத்தையும் வளைந்த வணரையும் கோட்டையும் உடைய செங்கோட்டி யாழை ஒத்ததன்று. மேலும் இது இடத்தோள் பக்கம் அணைக்கப்பட்டு குயிலப்படும் கருவி என பெரும்பாணாற்றுப் படையும், சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன.
தொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ (பெரும். 16)
இன்குரற் சீறியாழ் இடவயிற் றழீஇ (சிறு. 35)
இவை தற்காலத்தில் வீணையைக் குயிலுவதைப் போன்றே அக்காலத்திலும் குயிலப்பட்டன. சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்தது வில் யாழ் போன்ற ஒரு எளிமையான இசைக்கருவிதான். இது சிலப்பதிகாரத்தில் தான் சிறிது மேன்மைப்பட்டது என்பது இன்னொரு வாதம்.
வில் யாழைப் பற்றிய குறிப்புச் சங்ககாலத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. பெரும்பாணாற்றுப் படையில், ... ... ... குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரு. 180-182)
என்ற அடிகளில் புலவர் உருத்திரங்கண்ணனார், பேரியாழிற் புலமை வாய்ந்த ஒரு பெரும்பாணனிடம் அவன் போகும் வழியிலுள்ள காஞ்சியில் இடையர் கையிலுள்ள வில்லாகிய யாழையும் அதன் உறுப்புகளையும் குறிக்கிறார். குமிழங் கொம்பினால் வளைத்துக் கட்டப்பட்ட கோட்டின் ஒரு நரம்பை உடைய வில் யாழை இடையர் வாசிக்க கேட்பாய் என்கிறார். வில்யாழ் பத்தல், போர்வை முதலிய உறுப்புகளை எல்லாம் கொள்ளாமல், இடையர்களால் பொழுது போக்குக்காகக் கையில் வைத்துக் கொள்ளப்பட்ட ஒரு சிறிய கருவி. இது இக்காலத்திலும் பிச்சை எடுப்பவரும் விளையாட்டுச் சிறுவர்களும் பயன்படுத்தும் ஒரு சிறிய கருவி. வில்லுப்பாட்டு பாடுபவர்களும் இதை மேலும் சிறிது பண்படுத்திப் பயன்படுத்துகின்றனர்.
சங்க நூல்களில் இல்லாது சிலப்பதிகாரம், மணிமேகலை, உரையாசிரியர்களால் கூறப்படும் மாடகம், தந்தரிகம் போன்ற உறுப்புகள் யாழின் இன்றியமையாத உறுப்புகள் ஆகும். இவை பிறகு தோன்றியிருக்கலாம் அதனால் யாழின் உருவம் பிறழாதது. ஞானாகுலேந்திரன், யாழ் என்னும் இசைக் கருவி இராஜராஜ சோழன் காலத்தில் இருந்ததைச் சுட்டிக்காட்டி, யாழ், வீணை என்ற இரு சொற்களும் பரியாயச் சொற்களாகப் (synonym) பயன்படுத்தப் பட்டதைக் கூறுகிறார். இராஜராஜ சோழனின் ஆஸ்தான கவியாக இருந்த கரூவூரார் திருவிசைப்பாவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் யாழெடு இன்னிசையும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றதாகக் கூறுகிறார். கல்வெட்டில் 400 நடனக்காரர்களின் நடனத்திற்கு வீணை இசை குயிலப்பட்டது. என்று கூறப்படும் இடத்தில், சில சொற்கள் தெளிவின்றிக் காணப்படுகின்றன.
அவற்றோடு நடன ஆசிரியர்களைப் பற்றியும் பாடுகிறவர்கள் பற்றியும் வங்கியம் வாசிக்கிறவர்கள் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றால் ஞானாகுலேந்திரன் அச்சொற்கள் பலவித யாழ்களைக் குறிக்கும் சொற்களேயாகும் என்கிறார்.
செங்கோட்டியாழ் 4 பண் நரம்புகளையும் 3 தாள நரம்புகளையும் கொண்டது போலவே தற்கால வீணையும் அமையப்பெறுகின்றது. புரி நரம்புகள் மட்டுமே எண்ணிக்கையில் நாளாக நாளாக ஏற்றம்பெற்று இன்று 24 நரம்புகளாக (Ferts) ள்ளன.
இவற்றிலிருந்து தற்காலத்தில் வீணை என்று அழைக்கப்படுவது யாழேயாகும் என்றும், பலவிதமான யாழ்கள் அழிந்து, செங்கோட்டி யாழ் மட்டும் நிலைபெற்று, அதுவே இன்று வீணை என்னும் பெயரால் வழங்கப்படுகின்றது என்பதும் தெள்ளளத்தெளிவாகத் தெரிகிறது.

குறிப்பு
பழங்கால இசைத்தமிழிலிருந்து குறிப்பாக, சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள்களுடன் கருநாடக இசையின் அடிப்படைக் கூறுகளை ஆராய்ந்து தற்காலக் கருநாடக இசையின் அடிப்படை தமிழிசை தான் என்பதைத் தெளிவாக விளக்கியவர் ஆபிரகாம் பண்டிதர்.
இவர், சமஸ்கிருத நூற்களில் கூறப்படும் 22 அலகு முறை எவ்வாறு அறிவியல் அடிப்படையிலும் புழக்கத்திலிருக்கும் இசைக்கும் மாறுபாடானது என்பதை எடுத்துக்கூறி, 24 அலகு முறை தான் சரியானது என்பதையும் இப்பொழுது சங்கராபரணம் என்று வழங்குவதே முற்காலப் பழம்பஞ்சுரம், அதுவே அடிப்படைத்
தாய்ப்பண் என்பதையும் விளக்கமுறக் கூறியுள்ளார். தமிழிசைக்குக் கலங்கரை விளக்கமாக விளங்கிய ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் இரண்டு பாகங்கள் அடங்கிய மிகப்பெரிய கலைக்களஞ்சியம்.  தேவநேயப்பாவாணர் ஆபிரகாம் பண்டிதரை, ‘தமிழிசை இயக்கத்தின் தந்தைஎன்று கொண்டாடினார். அவருடைய மகன் வரகுணப் பாண்டியன் தந்தையாரின் நூலைத்
தெள்ளத் தெளிவாகப் படித்தறிந்தவர். ஆபிரகாம் பண்டிதர், தற்கால வீணை முற்காலச் செங்கோட்டி யாழே என்று கூறிச் சென்ற ஒரு சிறு செளிணிதியை, சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய நூல்கள் வாயிலாக நன்றாக ஆராளிணிந்து, செயற்பாடு மூலமாகவும் தெள்ளத்தெளிவாக அறிந்து, ‘பாணர் கைவழிஎன்ற நூலை வரகுணப் பாண்டியன் எழுதியுள்ளார்.

துணை நூற்கள்
·         ஆபிரகாம் பண்டிதர், கருணாமிர்த சாகரம், லாலி அச்சகம், தஞ்சாவூர், 1917.
·         வரகுணப் பாண்டியன், பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல், திருநெல்வேலி - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1950. மறு அச்சு, 2011.
·         ஞானாகுலேந்திரன் Music and Dance in the Thanjavur Big Temple , Krishi pathippagam , Thanjavur, 2004.




Post a Comment

0 Comments