அருள்வாயே! – 8 (Post No.11613)

 


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,613

Date uploaded in London  2 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 

அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! - 8

(65 முதல் 74 முடிய)

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் அருள்என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

 

65) காஞ்சீபுரம்

   அவமே யான்

    திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து

     தெளியமோ க்ஷத்தையென்று அருள்வாயே

 

பாடல் எண் 352 -   அறிவிலாப் பித்தர்எனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :  இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து நான் தெளிவு பெறுவதர்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்?

 

66) திருவானைக்கா

 

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய

   திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய

      துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே

 

பாடல் எண் 362 -   குருதி புலால் என்புஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :  அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டு கொள்வதற்கும் நீ அருள்வாயாக.

 

67) திருவருணை

அலமரும் வினைவாழ்வும்

சலில லிபியன சனனமு மலமல

   மினியு னடியரொ டொருவழி படஇரு

     தமரபரிபுர சரணமு மவுனமு மருள்வாயே

 

பாடல் எண் 368 -   அருவை மிடையெனஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :   வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும், போதும். இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒருவழிப்பட்டு (உன்னுடைய) இரண்சு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மௌன உபதேசத்தையும் அருள்வாயாக.

 

68) திருவருணை

குலவினை களையுங்

  கழல்தொழு மியல்தந் தருள்வாயே

 

பாடல் எண் 389 -   விரகொடு வளைஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :   முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக.

 

69) திருவருணை

எரிவாய் நரகிற் புகுதா தபடிக்

  கிருபா தமெனக் கருள்வாயே

 

பாடல் எண் 393 -   அருமா மதனைஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :   நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக) நரகத்தில் புகாத வண்ணம் உனது இரு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.

 

எரிவாய் நரகம் என்பது கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து ஆ ஏழு நரகங்களில் ஒன்று. இது கும்பிபாகம் என அழைக்கப்படும். பாவம் செய்தோரைக் குயச் சூளையில் சுடுவது போல வாட்டும் நரகம் இது.

 

70) திருவருணை

பறிமாதர்

  தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்

     சோதியொளிப் பாதமளித் தருள்வாயே  

 

பாடல் எண் 395 -   ஆனை வரிக்கோடுஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :   பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய் அஎன்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.

 

71) திருவருணை 

 சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே

   தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே 

பாடல் எண் 397 -   இமராஜன் நிலாவதுஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :  காமப்போருக்கு என்றே மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலே, உன்னைப் பிரிந்து தனியே தவிக்கும் மான் போன்ற இப்பெண் உயிர் சோர்ந்து போகாமல் இருக்க ஏதேனும் ஒரு வழி கூறி அருள்வாயாக.

 இந்தப் பாடல் அகத்துறையில் நாயக-நாயகி பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காகப் பாடியது. இப்பாடலில் வரும் சந்திரன், தென்றல் காற்று, மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு ஆகியவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.


72) திருவருணை 

அடியேன் முன்

   கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

    கடுகிந  டங்கொ டருள்வாயே

 

பாடல் எண் 401 -   இருவினை அஞ்சஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :  என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரிவாயாக.

 

73) திருவருணை

    ஊடாடி யவரோடு முழலாதே

      ஊராகத் திகழ்பாத மருள்வாயே

 

பாடல் எண் 418 -   கோடான மடவார்கள்எனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :  (விலைமாதர்களுடன்) ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமல், (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்தருள்வாயாக.

 

74) திருவருணை 

இறையோ னிடமாய் விளையா டுகவே

    யியல்வே லுடன்மா அருள்வாயே

 

பாடல் எண் 421 -   சிவ மாதுடனேஎனத் தொடங்கும் பாடல்

 

பொருள் :  சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.

 

குறிப்பு & நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

 

                                             ***.                                  தொடரும்

 


Post a Comment

0 Comments